செந்தமிழ்சிற்பிகள்

புதுமைப்பித்தன் (1906 - 1948)

புதுமைப்பித்தன் (1906 - 1948)

 

அறிமுகம்

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது

புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்.

புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறந்த சிறுகதைகளை உலகத்தரத்தில் எழுதியவர்.அவற்றின் கருத்து செறிவால் பாரதியை அடுத்தவர்.இன்று வரை தமிழ் சிறுகதை உலகின் மன்னாதி மன்னர்.பல மேற்குலக இலக்கியங்களைத் தமிழுக்குள் தன் மொழிபெயர்ப்பின் மூலம் கொண்டு வந்தவர்.அந்த வேள்விக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டவர்.

புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம், 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன.


சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு.